திங்கள், ஜூன் 09, 2014

எம்பிஏ மாணவர் போலி என்கவுண்ட்டர்: 17 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

உத்தராகண்ட் மாநிலம், காசியாபாத்தை சேர்ந்த ரன்பீர் சிங் என்ற எம்.பி.ஏ மாணவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தனது உடல் முழுவதும் 29 துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் டேராடூனில் உள்ள மோகினி சாலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். அவர் வழிப்பறியில் ஈடுபடுபவர் என்று போலீசார் குற்றம் சாட்டினர். ஆனால் போலியான என்கவுண்ட்டர் மூலம் போலீசார் தங்கள் மகனை கொன்றுவிட்டதாக அவரது தந்தை புகார் அளித்தார். 

போலி என்கவுண்ட்டர் என குற்றம் சுமத்தப்பட்டதால் இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.ஐ விசாரணையின் போது போலீசார் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

வழிப்பறி கும்பலை தாங்கள் தேடிவந்ததாக தெரிவித்த போலீசார், சோதனை சாவடியில் அருகே அவரை வழிமறித்த போது அவர் அங்கிருந்து தப்பித்து செல்ல முயற்சி செய்ததாக தெரிவித்தனர். அவர் தப்பிச் செல்வதை தடுக்கவே அவரை துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

ஆனால் ரன்பீரின் உடலில் பாய்ந்திருந்த குண்டுகள் வெகு அருகே நின்று அவரை துப்பாக்கியால் சுட்டுகொன்றதை நிரூபித்தன. மேலும், அவர் சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களும் உடல் முழுவதும் காணப்பட்டன. இதையெல்லாம் கண்டுபிடித்த சி.பி.ஐ. அதிகாரிகள் கொலை நடந்த சில நாட்களிலேயே இக்குற்றத்தில் ஈடுபட்ட போலீசார் சிலரை கைது செய்தனர். 

இதற்கிடையில், 11 போலீசார் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீண்ட காலமாக இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த போலி என்கவுண்ட்டரில் தொடர்புடையதாக கூறப்படும் 17 போலீசாரில் 7 பேர் நேரடியாக கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 10 போலீசார் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் கடந்த 6ம் தேதி தீர்ப்பளித்தது. 

இவர்களுக்கான தண்டனை தொடர்பாக இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட 17 போலீசாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக