சனி, ஜூன் 21, 2014

தேவாலயம் மீது தாக்குதல்: ஞானதேசிகன் கண்டனம்



தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொல்லப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே இதற்கு முன்னர் இப்படிப்பட்ட கொலை சம்பவம் தொடர்ந்து நடை பெற்றுள்ளன.


இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை அறிய வேண்டும். தமிழகத்தில் அமைதி குலைப்பதற்கும், தகர்ப்பதற்கும் ஏற்படுத்தப்படுகிற சதியா? என்பதை அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.அதே நேரத்தில் சுரேஷ் குமார் இறுதி ஊர்வலத்தில் வன்முறை வெறியாட்டங்களில் இந்து முன்னணியினர் ஈடுபட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதை விட மோசமான செயல் கிறிஸ்தவ தேவாலயம் மீதும் கற்களை எறிந்து தாக்கப்பட்டிருக்கிறது.

தேவாலய போதகர்கள் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கின்றது. இதனை தமிழ் நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கின்றது.மத்தியில் ஆட்சி வந்து விட்டது என்கிற மன தைரியத்தில் இதுபோன்ற சமய மோதல்களை தொடங்குவது என்பது தமிழக மக்கள் எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சுரேஷ்குமாரின் ஊர்வல பாதை தெரிந்தும் கூட ஏன் தேவாலயம் அருகில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. உடனடியாக கொலையாளிகள் கைது செய்யப்பட வேண்டுமென்றும் வன்முறையில் ஈடுபடுபவர்களின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக