"வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய ஸ்ரீராம் சேனைத் தலைவர் பிரமோத் முத்தாலிக் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று வலியுறுத்தி பனாஜி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கோவா காங்கிரஸ் கமிட்டி வியாழக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து, பிடிஐ செய்தியாளரிடம் கோவா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் துர்காதாஸ் காமத் கூறுகையில், "கோவாவிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே பொது கேளிக்கை விடுதிகள்தான். இந்த மாநிலத்தில் பொது கேளிக்கை விடுதிகளை நடத்த சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவா மாநிலத்தில் பொது கேளிக்கை விடுதிகளை நிறுத்தப் போவதாக முத்தாலிக் தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலத்தில் உள்ள ஹிந்துக்கள் மதச்சார்பற்றவர்கள். எது சரி என்று அவர்களுக்குத் தெரியும்.
இந்நிலையில், மாநிலத்தில் மதச்சார்பற்ற சூழல் பாதிக்கப்படாமல் இருக்க அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது' என்றார்.
இதற்கு முன்னதாக, "ஹிந்துக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ஆயுதங்கள் வைத்துக் கொள்ள வேண்டும்' என்று கடந்த ஆண்டு அகில இந்திய ஹிந்து மாநாட்டில் முத்தாலிக் பேசியதாக காமத் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். ஆனால், முத்தாலிக்கிற்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்று கூறி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய போலீஸார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கோவாவில் நடைபெற்றுவரும் அகில இந்திய ஹிந்து மாநாட்டில் கலந்து கொள்ள கோவாவில் முகாமிட்டுள்ள முத்தாலிக் கூறுகையில், "கோவாவில் ஸ்ரீராம் சேனையின் பிரிவு தொடங்கப்படும். பொது கேளிக்கை விடுதி கலாச்சாரம் மற்றும் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக