ஐதராபாத்தில் ஒரு மதத்தை சேர்ந்தவர்களின் கொடி எரிக்கப்பட்டதையடுத்து கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினர் ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் அவர்களை எச்சரித்தும் கலைந்து செல்லவில்லை.
இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த கலவரம் மற்றும் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். மேலும் 10 காவலர்கள் உள்பட பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் கவர்னர் நரசிம்மன் இன்று ஆய்வு நடத்தினார்.
பின்னர் இந்த கலவரம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட்டார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை தவிர தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் கவர்னர் அறிவித்தார். கலவரத்தில் பொருட்களை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்த கவர்னர், பொதுமக்கள் வதந்தியை நம்ப வேண்டாம் என்றும், அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கலவரம் நடந்த ராஜேந்தர்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு இன்று இரண்டாவது நாளாக நீடிக்கிறது. ஏராளமான போலீசாரும் துணை ராணுவப்படையினரும் ரோந்து சுற்றி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக