பீகார் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பேற்று நிதிஷ்குமார், தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். எம்.எல்.ஏ.க்கள் கூடி அவரை மீண்டும் முதல்-மந்திரியாக தேர்வு செய்ததை நிதிஷ்குமார் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா நேற்று அந்த மாநில கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. கவர்னர் டி.ஒய்.பாட்டீல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜிதன்ராம் மஞ்சி புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டார்.
மேலும் விஜய்குமார் சவுத்திரி, விஜேந்திர பிரசாத் யாதவ் உள்பட 17 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றனர். இவர்கள் ஏற்கனவே நிதிஷ்குமார் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்கள் ஆவர். இந்த விழாவில் முன்னாள் முதல்-மந்திரி நிதிஷ்குமார், சபாநாயகர் உதய்நரேன் சவுத்திரி, தலைமைச் செயலாளர் ஏ.கே.சின்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மொத்தம் 239 உறுப்பினர்களை கொண்ட பீகார் மாநில சட்டசபையில் ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சிக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும் 2 சுயேச்சை உறுப்பினர்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. ஒருவரும் ஆதரவு கொடுக்கின்றனர். 4 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி ஐக்கிய ஜனதாதள கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜிதன்ராம் மஞ்சி தலைமையிலான புதிய அரசு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்கிறது. அதன் மீது வாக்கெடுப்பு நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக