ஞாயிறு, மே 04, 2014

அஸ்ஸாமில் கலவரம் பரவுகிறது:மரண எண்ணிக்கை 32 ஆக உயர்வு

அஸ்ஸாமில் போடோ தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.பக்ஸா மாவட்டத்தில் நாராயண் குரியில் இருந்து நேற்று காலை இரண்டு உடல்கள் கைப்பற்றப்பட்டன.நேற்று மரணித்தவர்களில் இலீனா காத்தூன், ஆரிஃபுல் இஸ்லாம் ஆகிய குழந்தைகளும் அடங்குவர்.

வன்முறையாளர்களை கண்டு பயந்து பைகி நதிக்கரையில் ஒளிந்திருந்த பத்துக்கும், ஏழு வயதுக்கும் இடைப்பட்ட மூன்று குழந்தைகளை காப்பாற்றியதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
வன்முறை தீவிரமான கொக்ராஜர், பக்ஸா, சிராங் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை கண்டால் உடன் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
கலவரம் தொடர்பாக பக்ஸா மாவட்டத்தைச் சார்ந்த 23 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.கொக்ராஜரில் எட்டுபேரை பிடித்து விசாரித்துவருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.வன்முறைகளை பிரதமர் மன்மோகன் சிங் கண்டித்துள்ளார்.அங்கு அமைதிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.அஸ்ஸாம் நிலைமைகள் குறித்து முதல்வர் தருண் கோகாய் மற்றும் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே ஆகியோருடன் பிரதமர் பேசினார்.
வன்முறைகள் குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ)யிடம் ஒப்படைக்க மாநில அரசு தீர்மானித்துள்ளது.
மக்களவை தேர்தலில் கொக்ராஜர் தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஹீரா ஸரானிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்பது போடோ தீவிரவாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.இதனைத்தொடர்ந்து போடோக்கள் வியாழக்கிழமை இரவில் முஸ்லிம் வீடுகளை தாக்கி கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டனர்.சிறப்பு போடோ பகுதியில் ஆட்சி நிலவும் போடோலாண்ட் டெரிட்டோரியல் கவுன்சிலின் தலைமையகம் கொக்ராஜரில் அமைந்துள்ளது.போடோ லாண்ட் பீப்பிள்ஸ் ஃப்ரண்ட் இங்கு ஆட்சி புரிகிறது.போடோலாண்ட் பீப்பிள்ஸ் ஃப்ரண்ட், அஸ்ஸாமில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக