தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி அரசு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ரேகா என்ற இளம்பெண் கடத்தி கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு போரூர் ஏரியில் வீசப்பட்டுள்ளார். அவரது பெற்றோர் ஏற்கெனவே தன் மகளுக்கு இருக்கும் அச்சுறுத்தல் குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறையின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கு காரணம்.
ஏற்கெனவே, சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய உமா மகேஸ்வரி என்ற பெண் கொல்லப்பட்டதற்கும் காவல் துறை அலட்சியமே காரணமாக இருந்தது.வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன், காவல்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கையுடந்தான் செயல்பட்டு வருகிறது என்றும் தீவிரவாதம் தமிழகத்தில் தலை தூக்க விடாமல் இருப்பதில் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்தாக செயல்படுகிறது என அறிக்கை விடுத்தார்.
ஆனால் அதற்கு பிறகும் தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுதான் காவல்துறை கண்ணும் கருத்துமாக செயல்படும் லட்சணமா?தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி அரசு மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக