சனி, மே 10, 2014

தென்னாப்பிரிக்க தேர்தலில் ஆளும் தேசிய காங்கிரஸ் பெரும் வெற்றி

நிறவெறி ஆட்சிக்கு முடிவு கட்டிய பின்னர் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஐந்தாவது தேர்தலின் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ஆப்பிரிக்காவின் ஆளும் தேசிய காங்கிரஸ் 62 சதவிகிதம் பெற்று பெரும் வெற்றி பெற்றுள்ளது. இது அக்கட்சி கடந்த 1994ஆம் ஆண்டு மறைந்த நெல்சன் மண்டேலா தலைமையின் கீழ் எதிர்கொண்ட முதல் ஜனநாயக பொதுத் தேர்தலின்போது பெற்ற அதே அளவு வாக்கு விகிதத்தை ஒத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அப்போது விடுதலை இயக்கமாக செயல்பட்டு பின்னர் தேசிய கட்சியாக மாற்றம் பெற்று உள்நாடு மட்டுமில்லாமல் உலகளவில் இருந்த ஆப்பிரிக்கர்களையும் தன்பக்கம் இந்தக் கட்சி ஈர்த்தது. இப்போதோ ஊழல், வெகுஜன அதிருப்தி மற்றும் புகார்களால் சூழப்பட்ட கட்சியாக தேசிய ஆப்பிரிக்க காங்கிரஸ் காட்சியளிக்கின்றது. 

கடந்த 1994ஆம் ஆண்டு பெற்ற 62. 7 சதவிகிதமானது கடந்த பத்தாண்டுகளில் இக்கட்சிக்கு அதிகரித்திருக்க வேண்டும். இருப்பினும், 100 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ள நிலையில் 62 சதவிகிதமே பெற்றுள்ளது மக்களின் ஆதரவு குறைந்துள்ளதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பெருமளவில் போட்டி அளிக்க இயலாத எதிர்க்கட்சியும், அடுத்த தலைமுறைக்கான விடுதலை குறித்த எண்ணங்கள் பரவலாக்கப்பட்டதுவுமே அக்கட்சிக்கு இந்த அளவு வெற்றியை அளித்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் தேர்தல் ஆணையம் இன்று இறுதி முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்த வெற்றி மூலம் அந்நாட்டு அதிபர் ஜேகப் ஜுமா இரண்டாவது முறையாக அதிபர் பதவியைத் தொடரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பல ஆண்டுகளாக ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு மக்களிடையே செல்வாக்கை இழந்துள்ள ஜுமாவின் எதிர்பார்ப்பான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை கட்சி பெறமுடியாதபோதும் பாதுகாப்பான 60 சதவிகிதத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக