ஞாயிறு, மே 18, 2014

தெற்காசிய கூடைப்பந்து போட்டி: இந்திய ஆண்கள் அணி சாம்பியன்

3-வது தெற்காசிய ஆண்கள் சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்தது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மாலத்தீவை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் மாலத்தீவு அணி திணறியது.

முதல் பாதியில் 64-16 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த இந்திய அணி முடிவில் 108-32 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இந்திய அணியில் அம்யோத்சிங், பிகென் பெதானி, அம்ரித் மான் ஆகியோரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

இந்திய அணி தனது எல்லா ஆட்டங்களிலும் வெற்றியை சுவைத்தது. முந்தைய லீக் ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் வங்காளதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய அணிகளை வென்று இருந்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆண்கள் அணி சீனாவில் ஜூலை மாதம் நடைபெறும் ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது. ஆசிய போட்டியில் சீனா, ஈரான், பிலிப்பைன்ஸ் போன்ற வலுவான அணிகளின் சவால் இந்திய அணிக்கு காத்து இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக