செவ்வாய், மே 13, 2014

மெக்சிகோவில் வன்முறை: போதை மருந்து கும்பலின் தலைவர் கொலை

மெக்சிகோவில் பிரபலமாக இருக்கும் செட்டாஸ் போதை மருந்து கடத்தல் கும்பல் வன்முறை செயல்களில் ஈடுபட்டுவந்ததினால் அரசு இந்த இயக்கத்தின் தலைவனைத் தேடிவந்தது. மெக்சிகோ ராணுவத்திலிருந்து ஓடிப்போன கல்டினோ மெல்லாடோ குரூஸ் என்பவனே அந்த இயக்கத்தின் தலைவனாக இருந்தான், இவன் Z-9 என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டான். 

ராணுவத்தின் எலைட் பிரிவில் இருந்த இவன் தற்போது வளைகுடா பகுதியில் செயல்பட்டுவரும் வன்முறை போதை மருந்துக் கும்பலின் தலைவன் ஒசியல் கார்டினாஸ் கைலனுக்கு உதவியாகப் பணி புரிந்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

கடந்த ஏப்ரல் மாதம் 5-ம் தேதி மெக்சிகோவின் வடகிழக்குப் பகுதி மாநிலமான டமாலிபாசில் ஏற்பட்ட வன்முறைக் கலவரத்தைத் தொடர்ந்து அங்கு 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துபோனார்கள். இதனால் மெக்சிகோவின் புலனாய்வுத்துறை குரூசின் நடமாட்டத்தைக் கவனித்து வந்துள்ளது. 

ரெய்நோசா பகுதியில் குரூஸ் மறைந்திருப்பதை அறிந்த ராணுவம் நேற்று அவனது இருப்பிடத்தை சுற்றி வளைத்தது. மறைவிடத்தில் இருந்த பாதுகாப்பாளர்கள் இராணவத் துருப்புகள் மீது துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். 

இவர்களுக்கு உதவி செய்ய வெளியிலும் ஏராளமான ஆயுதமேந்திய கும்பல் வந்தது. இருப்பினும், சண்டையின் முடிவில் மெல்லாடோ குரூஸ் வீட்டினுள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய பாதுகாப்பு கமிஷனர் மான்டி அலேஜன்ட்ரோ ருபிடோ தெரிவித்தார்.  

அமெரிக்காவின் எல்லைப்புறத்தில் செயல்பட்டுவந்த குற்றவியல் குழுவில் மெல்லாடோ இரண்டாவது இடத்தில் இருந்துவந்ததாக ருபிடோ தெரிவித்தார். செட்டாஸ் தவிர மற்றொரு குழு ஒன்றையும் அவன் செயல்படுத்தி வந்ததாகக் கூறிய ருபிடோ அது பற்றிய விபரங்களை வெளியிடவில்லை. 

டமாலிபாஸ் பிரிவுக்கான புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மெக்சிகோ அரசு இன்று தகவல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக