தேர்தல் முடிவுகள் எதிரொலியாக, தரும்புரி, கன்னியாகுமரி, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி மாவட்ட அதிமுக செயலர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்பு:
"தருமபுரி மாவட்டச் செயலாளர் கே.பி.அன்பழகனும் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். புதிய செயலாளர் நியமிக்கப்படும் வரை அந்தப் பணிகளை அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பி.பழனியப்பன் கூடுதலாக கவனிப்பார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலர் பொறுப்பில் இருக்கும் ஏ.செல்வராஜ், கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலர் பொறுப்பில் இருக்கும் டி.ஜாண் தங்கம் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்ட கழகங்களுக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்டக் கழகப் பணிகளை அ.தமிழ்மகன் உசேன் கவனித்துக் கொள்வார்.
திருவள்ளூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலர் பொறுப்பில் இருக்கும் பி.வி.ரமணா, இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். வேறொருவர் நியமிக்கப்படும் வரை, மாவட்டக் கழகப் பணிகளை மாதவரம் வி.மூர்த்தி கவனித்துக் கொள்வார்.
அதேபோல் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஏ.அன்பழகன், மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஓம்சக்தி சேகர் எம்எல்ஏ ஆகியோர் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படும் வரை, அந்தப் பணிகளை புதுச்சேரி மாநில துணைச் செயலாளரும், எம்எல்ஏவுமான பி.புருஷோத்தமன் மேற்கொள்வார்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக