அண்மையில் நிறைவடைந்த 16-வது மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கு ரூ. 3,426 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் 131 சதவீதம் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கு ரூ. 1,483 கோடி செலவிடப்பட்டது.இந்த ஆண்டு 9 கட்டமாக நடைபெற்ற தேர்தலில் அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சார்பிலான ஒட்டுமொத்தச் செலவு ரூ. 30,000 கோடியாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது.வாக்களிப்போரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வழக்கத்தை விட கூடுதலாகச் செலவிட்டதும், பணவீக்கமும், தேர்தல் செலவு அபரிமிதமாக அதிகரித்திருப்பதற்கு காரணம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஏராளமான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் அதிக அளவில் தேர்தலில் போட்டியிட்டதும் தேர்தல் செலவு அதிகரிப்பதற்கு மற்றொரு காரணம்.வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம், வீடு வீடாகச் சென்று வாக்குச் சாவடிச் சீட்டு விநியோகித்தல், வாக்காளர்கள் சரிபார்ப்பு என்று தேர்தல் ஆணையம் கூடுதலாகச் செலவு செய்தது.
1952 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது செய்த செலவை விட கடந்த 2009ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் செய்த செலவு 20 மடங்கு அதிகம்.
1952ஆம் ஆண்டில் வாக்காளர் ஒருவருக்கு 60 காசு செலவிடப்பட்டது. ஆனால் 2009-இல் இது ரூ. 12 ஆக அதிகரித்தது.
1952-இல் மொத்த தேர்தல் செலவு ரூ. 10.45 கோடி. ஆனால் 2009-இல் நடைபெற்ற தேர்தலில் ரூ.1,483 கோடி செலவிடப்பட்டது.
முதல் 6 மக்களவைத் தேர்தல்களின்போது சராசரி தேர்தல் செலவு வாக்காளருக்கு ஒரு ரூபாய்க்கும் கீழாகத்தான் இருந்தது. ஆனால் அதையடுத்து நடைபெற்ற தேர்தல்களில் இந்தச் செலவு பல மடங்கு அதிகரித்தது.
அரசு செய்யும் செலவு தவிர, அரசியல் கட்சிகள் , வேட்பாளர்கள் உள்ளிட்டோர் செய்யும் செலவுகளும் மிக அதிகம். இந்த ஆண்டு வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு வரம்பு தலா ரூ. 40 லட்சத்தில் இருந்து ரூ.70 லட்சமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தேர்தல் செலவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் கடந்த 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலின்போது வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் செய்த செலவு ரூ. 42,000 கோடி( 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்). இந்தச் செலவுக்குப் போட்டியாக இந்தியாவில் நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தல் செலவு இருக்கும் என்று உலகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஊடக ஆய்வு நிறுவனம் ஒன்று தேர்தலுக்கு முன்பு நடத்திய ஆய்வில், "தேர்தலில் கோடீசுவரர்கள், நிறுவன அதிபர்கள், காண்டிராக்டர்கள் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிடுவதால், அவர்கள் கணக்கில் காட்டப்படாத பணத்தை செலவிடுவதால் தேர்தல் செலவு மேலும் அதிகரிக்கும்'' என்று கூறி இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக