புதன், மே 14, 2014

இடித்துரைப்பாளர் பாதுகாப்பு மசோதா சட்டமானது

ஊழல்களை வெளிக்கொண்டு வரும் இடித்துரைப்பாளர்களின் (Whistle-blower) பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
இதுதொடர்பான அறிவிக்கை மத்திய அரசு இதழில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டதை அடுத்து, அது முறைப்படி சட்டமானது.

பல்வேறு அரசுத் துறைகளில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருபவர்கள் இடித்துரைப்பாளர் என்று அழைக்கப்படுகின்றனர். ஊழல்களை வெளிக் கொண்டு வருவதால், அவர்களின் பாதுகாப்புக்கு பரவலாக அச்சுறுத்தல் நிலவுகிறது. இதனையடுத்து அவர்களின் பாதுகாப்பு தொடர்பான மசோதா, கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதனையடுத்து 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, மாநிலங்களவையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த மசோதா நிறைவேறியது.

தற்போது அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று சட்டமாகியிருப்பதால், இடித்துரைப்பாளர்கள் எந்தவித அச்சமுமின்றி ஊழல்களை வெளிக்கொண்டு வருவது ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தவறான தகவல்களை தெரிவிக்கும் நபர்களுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.30,000 அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக