ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தஜிகிஸ்தான் எல்லையில் உள்ள பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று மதியம் ஒரு மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்தன. அவற்றில் வசித்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பேர் மண்ணுக்குள் புதையுண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதையுண்டவர்களை உயிருடன் மீட்க ஐ.நா. பேரிடர் நிவாரணக் குழுவினரின் மேற்பார்வையில் ஏராளமான மீட்புப் படையினரும், உள்ளூர்வாசிகளும் மண்ணைத் தோண்டி சிலரை மட்டும் உயிருடன் மீட்டுள்ளனர்.
இதுவரை 350-க்கும் மேற்பட்ட பிரேதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதுமான அளவுக்கு மண்ணை அள்ளும் இயந்திரங்கள் இல்லாததால் சற்று சுணக்க நிலை நீடித்தது.
மேலும், அந்த மலைப்பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்குள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர். இவ்வாறு வெளியேறிய 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மருத்துவ வசதி மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணியில் ஐ.நா. நிவாரணக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக