திங்கள், மே 19, 2014

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா: கருணாநிதி மறுப்பு

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

இது குறித்து அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை - கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு. கழகத்தின் தோல்விக்குப் பொறுப்பேற்று, திமுக பொருளாளர் ஸ்டாலின் ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறதே?

"அது பொய்; கடைந்தெடுத்த பொய். பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக என்னிடம் வந்து சொன்னார். எனது அறிவுரையை ஏற்றுக்கொண்டு முடிவை மாற்றிவிட்டார்.

மக்களவை தேர்தலில் தி.மு.க. தோல்வி குறித்து மிக விரைவில் தி.மு.கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழு கூடி, இதைப் பற்றி ஆய்வு செய்யும்."

தன்னை விலக்கியதால் தான் தி.மு.க.விற்கு தோல்வி ஏற்பட்டது என்பதைப் போல மு.க.அழகிரி சொல்லியிருக்கிறாரே?

"அவரை நானும் தி.மு. கழகமும் மறந்து பல நாட்கள் ஆகின்றன. அவர் கழகத்தில் இருக்கும்போதே தி.மு.கழகம் இரண்டு மூன்று முறை படுதோல்வி அடைந்திருக்கிறது."

ஸ்டாலின் ராஜினாமா செய்ததை, ஒரு நாடகம் என்று அழகிரி கூறியிருக்கிறாரே?

"அவரைப் பற்றி நான் இனியும் பேச விரும்பவில்லை. நான் முன்பே கூறியதைப் போல அவரை நான் மறந்து நீண்ட நாளாகிறது" என்றார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக