வெள்ளி, மே 23, 2014

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு : பாஜகவுக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், பயங்கரவாத விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்பது குறித்து ஆலோசித்து வருவதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு தொடர்பாக பாஜகவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேர்தல் பிரச்சாரத்தின்போது மட்டும் பாஜக, பாகிஸ்தான் குறித்து அனைத்து வகையிலும் வெறுப்புப் போக்கினை வெளிப்படுத்தியது. ஆனால், அவர்கள் தற்போது பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பெரிய அளவில் பிரச்சாரம் செய்த பாஜக, தற்போது தன் நிலையை மாற்றிக் கொண்டதா என தெரிய வேண்டும்.
நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சி அமைக்கிறது. அதனால் அவர்கள் தங்கள் பதவியேற்பு விழாவிற்கு யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்.

ஆனால், இதே கட்சிதான், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானுடன் அவர் மேற்கொண்ட நுல்லுறவு கொள்கைகள் அனைத்தையும் விமர்சித்தது. பயங்கரவாதத்துடன் மன்மோகன் சிங் வெறும் பேச்சுவார்த்தையை நடத்தி கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தது" என்று திவாரி கடுமையாக பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக