வியாழன், மே 29, 2014

குண்டு வெடிப்பு வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான புலன் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த மே 1-ம் தேதி காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெங்களூர் குவஹாத்தி விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் சுவாதி என்ற மென்பொருள் நிறுவன பொறியாளர் உயிரிழந்தார். 14 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நடத்தி வரும் புலன் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கக் கோரி வழக்கறிஞர் எம்.துரைச்செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் அருணா ஜெகதீசன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோரைக் கொண்ட விடுமுறை கால அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 4 வார காலத்துக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்யும் வகையில், நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக