தாய்லாந்தில் பிரதமராக இருந்த தக்ஷின் ஷினவத்ரா மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அந்நாட்டு மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் மீதான அவமதிப்பு போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டு கடந்த 2006ஆம் ஆண்டில் அந்நாட்டு ராணுவத்தின் மூலம் பதவி இறக்கப்பட்டார். அதன் பின்னர் பிரதமர் பதவிக்கு வந்த அவரது சகோதரி இங்க்லக் ஷினவத்ரா அவரது சகோதரரின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்திய எதிர்த்தரப்பு அவரையும் பதவி விலகக் கோரி கடந்த ஆண்டு இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்டது.
தொடரும் இந்தப் போராட்டங்களின் நடுவில் கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டிற்கான பொதுத் தேர்தலை இங்க்லக் நடத்தினார். ஆனால், பல தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறாததால் அந்தத் தேர்தலை செல்லாததாக அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் அறிவித்தது. வரும் ஜூலை மாதம் புதிய தேர்தலுக்கான தேதியையும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இங்க்லக் முற்றிலும் பதவி விலகினால்தான் தேர்தலுக்கு ஒத்துழைப்பு அளிப்பதென்று எதிர்த்தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு மூத்த அரசு ஊழியரான தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் தவில் பிலன்சிரியை இடமாற்றம் செய்ததில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இங்க்லக் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டில் அவரைப் பதவி விலகுமாறு தாய்லாந்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தன்னுடைய அரசியல் சக்தி வாய்ந்த குடும்பத்திற்கு நன்மை பெறுவதற்காக அரசியலமைப்பு விதிமுறைகளை மீறி இங்க்லக் செயல்பட்டார் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அவர் மட்டுமின்றி அவரது அமைச்சரவையில் உள்ள ஒன்பது அமைச்சர்களும் இதற்கு உடந்தையாக இருந்தனர் என்று கூறி அவர்களையும் பதவி விலகுமாறு உத்தரவிட்டுள்ளது.
தாய்லாந்தின் நீண்டகால அரசியல் நெருக்கடியில் இந்தத் தீர்ப்பு வியத்தகு திருப்பமாகக் குறிப்பிடப்படுகின்றது. இங்க்லக்கிற்குப் பிறகு இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்படுபவர் யாரென்று இன்னும் தெளிவாகவில்லை. மேலும் இந்தத் தீர்ப்பினால் அதிருப்தியுற்றுள்ள இங்க்லக் ஆதரவாளர்கள் வரும் சனிக்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுமட்டுமின்றி, எதிர்த்தரப்பினரின் மற்ற கோரிக்கைகளான சீர்திருத்தக்குழுவை அமைப்பதன் மூலம் அரசியலமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தும் திட்டமும் நிறைவேறுவதென்பது என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக