மராட்டியத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தோல்வி கண்டது.
ஆம் ஆத்மி
நாட்டில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராடிய காந்தியவாதி அன்னா ஹசாரே விதைத்த விதையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முளைத்த கட்சி ஆம் ஆத்மி. அந்த கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத வெற்றியை பெற்று அனைவரது புருவத்தையும் உயர்த்தியது.
இதனால் பாராளுமன்ற தேர்தலிலும் அந்த கட்சி பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகளுக்கு சவாலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல அந்த கட்சி நாடு முழுவதும் பெரும்பான்மையான தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. குறிப்பாக மராட்டியத்தில் 33 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்த கட்சி சார்பில் பிரபல சமூக சேவகர் மேதா பட்கர் (வடகிழக்கு மும்பை) அஞ்சலி தமானியா (நாக்பூர்) ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர்.
தோல்வி
ஆரம்பத்தில் பெரிய கட்சிகளுக்கு சவாலாக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் தோற்றம் அளித்தனர். ஆனால் தேர்தல் தேதி நெருங்கியதையொட்டி அவர்களின் செல்வாக்கு பலவீனம் அடைய தொடங்கியது.
நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது ஆம் ஆத்மி மராட்டியத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக