ஞாயிறு, மே 11, 2014

உலகக் கோப்பை கால்பந்து: கலந்துகொள்ளும் அணியினரால் திணறும் ஹோட்டல்கள்

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அங்கு விளையாட்டு அரங்க நிர்மாணப் பணிகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமின்றி இந்தப் போட்டியில் கலந்துகொள்ள வரும் விளையாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 736 விருந்தினர்களையும் தங்க வைப்பதற்காக 9 மாநிலங்களின் 27 நகரங்களில் உள்ள பிரபல ஹோட்டல்களும் தங்களின் இறுதிகட்ட ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்றன. 

விளையாட்டு அணிகள் அனைத்தும் தங்கள் வீரர்களின் பாதுகாப்பு குறித்து  முழு கவனத்தையும் செலுத்திவருகின்றன. இந்த அணிகளின் வித்தியாசமான எதிர்பார்ப்புகள் ஹோட்டல் நிர்வாகிகளைத் திணற அடிக்கும் அளவிற்கு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவ் பாலோ நகரின் ரிபைரோ பிரெடோ பகுதியில் உள்ள ஜேபி ஹோட்டலின் அனைத்து அறைகளையும் தங்கள் வீரர்களுக்காக முன்பதிவு செய்துள்ள பிரான்ஸ் அணி அனைவரின் அறைகளின் சுவர் வண்ணம் உட்பட அனைத்தும் ஒரே மாதிரி இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வீரர்கள் கை கழுவதற்கு என்றும், குளியலுக்கு என்றும் இரண்டு விதமான சோப் திரவங்கள் வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக அந்த ஹோட்டல் நிர்வாகி குறிப்பிட்டார். இங்கிலாந்து அணியினர் தங்களுக்கென தனி உணவறை, ஜிம் மற்றும் நீச்சல் குள உபயோகம் போன்றவற்றைக் கேட்டுள்ளனர். 64 அறைகள் கொண்ட இரண்டு தளங்கள் இவர்களுக்கென்று பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டு இதுவரை 2 மில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டுள்ளதாக சவோ கொன்ரடோவில் உள்ள ஹோட்டலின் நிர்வாகி குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலிய வீரர்களில் நால்வருக்கு தனி காபி வழங்கும் இயந்திரமும் மற்றவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் சமைக்கப்படும் பிரேசில் உணவு வகைகள் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்னியா வீரர்கள் சப்தம் வெளிப்படாத அறைகளும், பயிற்சி ஊழியர்களுக்கும், தங்களுக்கும் தனித்தனி உணவறைகளும் கேட்டுள்ளனர். ஜெர்மானியர்களோ தங்களுக்கென தனி பயிற்சி மையமே அமைத்துக் கொண்டுள்ளனர். அல்ஜீரியர்கள் தங்களுக்கென குரான் புத்தகத்தையும், உருகுவே வீரர்கள் அமைதியான குளிரூட்டும் சாதனங்களையும், ஈக்வடார் வீரர்கள் தினமும் தங்கள் நாட்டு வாழைப்பங்கள் தங்களுக்குத் தரப்படவேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

மொத்தத்தில் இங்கு வரும் ரசிகர்களுக்கே இத்தகைய ஏற்பாடுகள் பெரிய சவாலாக இருக்கும். எனவே அவர்கள் தங்களின் அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்துகொண்டு இங்கு வரவேண்டும் என்று பிபா அமைப்பின் பொது செயலாளரான ஜெரோம் வல்க்கே வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக