வியாழன், மே 22, 2014

நாட்டைக் காப்பாற்ற தனது பிள்ளைகளை பணயம் வைக்கும் நெஞ்சுரம் அவரிடம் இருந்தது- திப்பு சுல்தான்

பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திப்பு உண்மையில் மத நல்லிணக்கவாதியாகவே விளங்கினார். இந்துக்களின் ஏகப்பிரதிநிதியாக சிவாஜியை இன்று முன்னிறுத்துகிறார்கள் சிவசேனா வகை வானரங்கள்.
ஆனால் அந்த மராத்திய போர் வீரர்களது படையெடுப்பிலிருந்து சிருங்கேரி மடத்தை காப்பாற்றியவர் திப்பு என்பது பலருக்கும் தெரியாத வரலாற்று உண்மை. பல இந்துக் கோவில்களுக்கு நிலத்தையும, பொன்னையும தானமாக வழங்கியுள்ளார் திப்பு. மைசூர் ராஜ்யத்தில் முதல் கிறிஸ்தவ ஆலயத்தை கட்டுவதற்கு நிலத்தை இலவசமாக வழங்கியவரும் திப்புதான். அவரது ஆஸ்தான அமைச்சர் பூர்ணய்யாவும் ஒரு இந்துதான்.
அமெரிக்க சுதந்திரப் போரை அங்கீகரித்ததுடன் அதனை 1776-ல் கொண்டாடிய சில உலக ஆட்சியாளர்களில் ஒருவர் திப்பு. தன்னை “குடிமகன் திப்பு” என்று பிரெஞ்சுப் புரட்சிக்கு பிறகு அழைத்துக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை. மூன்றாவது மைசூர் போரில் திப்பு தோற்ற பிறகு தனது ராஜ்யத்தில் பாதியையும், தனது பிள்ளைகளில் இருவரை பணயக் கைதியாகவும் வெள்ளையர்களிடம் கொடுத்து பின்னர் மீட்டார். நாட்டைக் காப்பாற்ற தனது பிள்ளைகளை பணயம் வைக்கும் நெஞ்சுரம் அவரிடம் இருந்தது. இன்றோ ஆளும் வர்க்கத்தின் வாரிசுகள் அனைத்தும் நாட்டை விற்பதற்கு வாரிசு அரசியலில் இடம் பிடித்திருப்பதை ஒப்பிட்டு பார்க்கலாம்.
முதன்முதலாக போர்ப்படையினருக்கு சம்பளம் தந்த திப்பு, தனது படைகள் கைப்பற்றும் பகுதிகளில் மக்களிடம் கொள்ளையடிக்கக் கூடாது எனவும், தானியங்களை மக்களிடமிருந்து விலை கொடுத்துதான் வாங்க வேண்டும் என்றும் தனது படை வீரர்களுக்கு உத்திரவும் போட்டார். மது விற்பனையை தடை செய்தார். கஞ்சா பயிரிடக் கோரி பிரிட்டிஷார், விவசாயிகளை வலியுறுத்திய போது திப்பு அதனை தடை செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக