ஞாயிறு, மே 11, 2014

மும்பை அணியை வீழ்த்தியது சென்னை

மும்பை- சென்னை அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல். 33-வது லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார்.
மும்பை அணியைச் சேர்ந்த சிம்மன்ஸ்- கௌதம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கௌதம் 9 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து சிம்மன்சுடன் ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். அணியின் ஸ்கோர் 77 ஆக இருக்கும்போது சிம்மன்ஸ் 38  ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து ராயுடுவுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார. ராயுடு சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். ரோகித் சர்மா 19 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த பொல்லார்டு முதல் பந்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். சிறப்பாக விளையாடிய ராயுடு 59 ரன்னில் வெளியேறினார். இறுதியில் வந்த கோரி ஆன்டர்சன் 6 பந்தில் 18 ரன் எடுக்க மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன் எடுத்தது. சென்னை அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் ஸ்மித்- மெக்கல்லம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள. மெக்கல்லம் 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஸ்மித்துடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். ரெய்னா 19 ரன்னில் பொல்லார்டு பந்தில் ஸ்டம்பிங் ஆனார்.

3-வது விக்கெட்டுக்கு ஸ்மித்துடன் டு பிளெசிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். இருந்தாலும் ஸ்மித் 57 ரன் எடுத்த நிலையில் பிரவீண் குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து டோனி களம் இறங்கினார். எதிர்முனையில் டு பிளெசிஸ் 31 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

கடைசி ஓவரில் 11 ரன் தேவைப்பட்டது. பொல்லார்டு அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் வைடு மூலம் ஒரு ரன் கிடைத்தது. இரண்டாவது பந்தில் 2 ரன் கிடைத்தது. 3-வது பந்தை டோனி சிக்சருக்கு விளாசினார். 4-வது பந்தில் பவுண்டரி அடித்து சென்னை அணியை டோனி வெற்றி பெற வைத்தார். அவர் 12 பந்தில் 22 ரன் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக