சனி, மே 10, 2014

5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 3 வீரர்கள் ஆசிய போட்டிக்கு தகுதி

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 12-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) தடகள சாம்பியன்ஷிப்போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. 
விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் வி.கே.ஜெயக்கொடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து வீரர்-வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

விழாவில் இந்திய தடகள சம்மேளன தலைவர் அடிலே சுமாரிவாலா, செயலாளர் சி.கே.வல்சன், தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் டி.கே.ராஜேந்திரன், பொருளாளர் சி.லதா, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் கே.முருகன், இந்திய தடகள சம்மேளன நிர்வாக அதிகாரி மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

நேற்று நடந்த 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் அரியானா வீரர் ஷர்வான் கார் (14:54.51 வினாடி), பஞ்சாப் வீரர் ஜதிந்தர்குமார் (14:55.24 வினாடி), அசாம் வீரர் அபிஷேக்பால் (14:56.23 வினாடி) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர். 

இதன் மூலம் மூவரும் ஆசிய ஜூனியர் போட்டிக்கான தகுதி இலக்கை (14:58.23 வினாடி) எட்டினார்கள். இருப்பினும் 2 பேருக்கு தான் ஆசிய போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். 20 வயதுக்கு உட்பட்ட 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் மராட்டிய வீராங்கனை சஞ்சிவினி ஜதா 17 நிமிடம் 11.27 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். 

இந்த போட்டி நாளை வரை நடக்கிறது. பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் டுட்டீ சந்த் 11.63 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய தேசிய சாதனையுடன் முதலிடத்தை பிடித்ததுடன், அமெரிக்காவில் நடக்க உள்ள உலக தடகள ஜூனியர் போட்டிக்கும் தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக