சனி, மே 03, 2014

அசாமில் தீவிரவாத தாக்குதல்: 3 குழந்தைகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

அஸ்ஸாமில் தீவிரவாதிகள் வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

இது குறித்து அஸ்ஸாம் காவல்துறை .ஜி. எல்.ஆர்.பிஷ்ணோய் கூறியதாவது:
கோக்ரஜார் மாவட்டம் பாலாபாரா கிராமத்தில், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி-சாங்பிஜித் (என்.டி.எப்.பி-எஸ்) என்ற அமைப்பைச் சேர்ந்த 25 தீவிரவாதிகள் .கே.47 துப்பாக்கியுடன் வெள்ளிக்கிழமை அதிகாலை நுழைந்தனர். அங்கு 3 வீடுகளில் அதிரடியாகப் புகுந்து சரமாரியாக சுட்டனர்.
இந்தக் கொடூர தாக்குதலில் 2 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 7 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் உயிரிழந்த ஒரு குழந்தையின் சடலம் காலையில் கண்டெடுக்கப்பட்டது. 2 பெண்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று பிஷ்ணோய் தெரிவித்தார். 
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுகையில்,
"கிராமத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் ஒவ்வொரு வீடாகத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவியது'' என்றனர்.பக்சா மாவட்டம் ஆனந்த பஜார் பகுதியில் வியாழக்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவத்தின்போது ஒரு குழந்தை படுகாயம் அடைந்தது.
அதே மாவட்டம் நிஸ்டேஃபேலி என்ற இடத்தில் 2 தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் பிபின் போரோ என்பவர் படுகாயம் அடைந்தார். குவாஹாட்டி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனிடையே, 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 5 பேரின் உடல்கள் தோட்டாக்களால் துளைக்கப்பட்ட நிலையில், பக்சா மாவட்டத்தின் இரு கிராமங்களில் கண்டெடுக்கப்பட்டன. இதனால், தீவிரவாதத் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக