ஞாயிறு, மே 25, 2014

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ஷாஸியா இல்மி, கேப்டன் கோபிநாத் விலகல்!

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ஷாஸியா இல்மி மற்றும் கேப்டன் கோபிநாத் ஆகியோர் விலகியுள்ளனர்.

ஷாஸியா இல்மி அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காஸியாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் வி.கே. சிங்கை எதிர்த்து தோல்வி கண்டவர். "ஏர் டெக்கான்" விமான நிறுவனத்தின் நிறுவனரான கேப்டன் கோபிநாத், ஆம் ஆத்மி கட்சியில் சில மாதங்களுக்கு முன்பு சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து திடீரென விலகியது தொடர்பாக டெல்லியில் ஷாஸியா இல்மி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் குறைந்து வருகிறது. குறிப்பாக, அரவிந்த் கெஜ்ரிவாலைச் சுற்றி உள்ள சில நபர்கள் குழுவாகச் செயல்படுகின்றனர். அவர்கள்தான் அக்கட்சியை இயக்குகின்றனர். சுயராஜ்ஜியம் குறித்து விவாதிக்கப்படும் என அறிவித்துள்ள கட்சியிலேயே அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் காணப்படவில்லை.
ஊழலை ஒழிப்பதே நோக்கம் என்று அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், சில கார்ப்பரேட் நிறுவனங்கள், சில அரசியல்வாதிகள் ஆகியோரின் பெயர்கள் அடங்கிய ஊழல் பட்டியலை வெளியிட்டார். அத்துடன், ஊழலுக்கு எதிரான தமது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் தொடக்க காலத்தில் மக்களுடன் சேர்ந்து அவர்கள் சார்ந்த இயக்கமாக செயல்பட்டோம். ஆனால், அரசியல் கட்சியாக அந்த இயக்கத்தை மாற்றிய பிறகு போராட்ட அரசியல் உத்தியை ஆம் ஆத்மி தலைமை கடைப்பிடித்தது.
கெஜ்ரிவால் அரசியல் சார்ந்த ஆம் ஆத்மியை மறந்து விட்டு, "பெயில்-ஜெயில்' குழப்பத்தில் தனது சக்தியை வீணடித்து வருகிறார். இந்த கருத்து வேறுபாடுகளால் நான் அடிப்படை உறுப்பினர் உள்பட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளேன்' என்றார் ஷாஸியா இல்மி.
இது தொடர்பாக கர்நாடக மாநில ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் பிருத்வி ரெட்டிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "கட்சியின் அண்மைக்கால செயல்பாடு மீதும், தலைமையின் கொள்கை மீதும் நான் முரண்பட்ட நிலையைக் கொண்டுள்ளேன். பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் பத்திரம் அளிக்க மறுத்து சிறையில் காலத்தை வீணடிப்பது சரியான அரசியல் நடவடிக்கையாக எனக்குத் தோன்றவில்லை. இதுபோல, சில நாள்களாக கட்சித் தலைமையின் நிலைக்கும் எனது சமூக கொள்கைக்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆகவே, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுகிறேன்' என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக