வெள்ளி, மே 31, 2013

கோடிகள் கொட்டும் ஐ.பி.எல்: அணிகளின் சராசரி லாபம் ரூ.108 கோடி!

ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்ற அந்தஸ்தோடு இருந்த கிரிக்கெட் விளையாட்டை, வியாபாரிகளின் பணம் கொழிக்கும் சந்தையாக மாற்றிய பெருமை ஐ.பி.எல்லுக்கு உண்டு. ஐ.பி.எல் என்ற 50 நாள் கிரிக்கெட் திருவிழா மூலம், விளையாட்டை சினிமாவோடு கலந்து ஒரு பொழுதுபோக்குக் கலவையாக்கி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1200 கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சம்பாதிக்கிறது. கிரிக்கெட்டை விட பணத்தின் விளையாட்டும் ஐ.பி.எல்லில் அதிகம்.

சமீபத்தில் இங்கிலாந்தை சேர்ந்த நிதி ஆலோசனை நிறுவனம் ஒன்று ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதன் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐ.பி.எல் தொடரின் மொத்த மதிப்பு 18,000 கோடி ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல் தொடரின் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சுமார் 1200 கோடி ரூபாயை சம்பாதிக்கிறது.
ஏலத் தொகை மூலம் ரூ.330 கோடி வருமானம்:
இந்தியா இன்ஃபோ லைன் ஆய்வு நிறுவனத்தின் கணக்குபடி பார்த்தால், கடந்த 2010ம் ஆண்டே 1170 கோடியை ஐ.பி.எல் தொடர் வருவாயாக ஈட்டியிருக்கிறது. இதில் சோனி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒளிபரப்பு உரிமம் வழங்கியதன் மூலம் 670 கோடியும், ஒவ்வொரு ஐ.பி.எல் அணியின் ஏலத் தொகையாக ரூபாய் 330 கோடியும் கிர்கிக்கெட் வாரியம் திரட்டியது.
மேலும் ஒட்டுமொத்த தொடரின் விளம்பரதாரர், இணையதளங்களில் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம், மைதான விளம்பரங்கள் ஆகியவை மூலம் 170 கோடியும் சம்பாதித்தது. ஆக கடந்த 2010ம் ஆண்டே ஐ.பி.எல் தொடர் 1170 கோடி சம்பாதித்தது. தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணிக்கும் விகிதாசார அடிப்படையில் ஒட்டுமொத்த வருவாயிலிருந்து பங்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ரூபாய் 620 கோடியை, தனது வருவாயை பிரித்து வழங்கியது கிரிக்கெட் வாரியம்.
வெற்றியாளர்களுக்கான பரிசுத்தொகை ரூ.27 கோடி:
மேலும் வெற்றியாளர்களுக்கான பரிசுத்தொகையாக 27 கோடியையும், ஆட்ட நடுவர்கள் மற்றும் விளையாட்டு அதிகாரிகளுக்கான சம்பளமாக 6 கோடியும் வழங்கியது. ஆக அந்த ஆண்டில் ஐ.பி.எல் தொடருக்கான செலவு 653 கோடியாக இருந்தது. 2010 ஆண்டில் மட்டும் ஐ.பி.எல் தொடரின் மூலம் கிரிக்கெட் வாரியம் 517 கோடி ரூபாயை லாபமாக ஈட்டியது.
ரூ. 108 கோடி வருமானம்:
அதே போல போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் சராசரியாக 18 முதல் 43 கோடி வரையில் லாபம் சம்பாதிக்கின்றன. அணிகளின் வருவாயை பொறுத்த வரை 70 சதவீதம், கிரிக்கெட் வாரியம் தரும் மொத்த வருவாயின் பங்காகும்.
இது தவிர அணியின் விளம்பரதாரர் உரிமம், மைதான விளம்பரங்கள், டி-சர்ட், தொப்பிகள் போன்ற பொருட்களின் விற்பனை, போட்டி டிக்கெட் விற்பனை ஆகியவற்றின் மூலம் சராசரியாக ஒவ்வொரு அணியும் 108 கோடியை வருவாயாக ஈட்டுகிறது.
இதில் கிரிக்கெட் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய ஏல தொகை, வீரர்களின் சம்பளம், மைதான வாடகை, அணியின் பயண செலவுகள் என்று சராசரியாக 65 கோடியை செலவு செய்கின்றன. ஆக விளையாட்டு என்ற தளத்திலிருந்து, வியாபார தளத்திற்கு கிரிக்கெட் விளையாட்டு வந்து 6 ஆண்டுகள் முடிந்துவிட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக