கொச்சி: நிரபராதியான தனக்கு நீதி வேண்டும் என்று கோரி கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கின் பெயரால் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கைதுச்செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநிலபி.டி.பி கட்சியின் தலைவரான அப்துல் நாஸர் மஃதனி இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தனக்கு நீதி வேண்டும் என்று கோரி 35 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.சிறை சூப்பிரண்டு வழியாக கடந்த வெள்ளிக்கிழமை இக்கடிதம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளத்.இக்கடிதத்தின் நகல் ஊடகங்களுக்கு பி.டி.பி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது ரஜீப் மூலம் அளிக்கப்பட்டது.
அக்கடிதத்தில் அப்துல் நாஸர் மஃதனி கூறியிருப்பவை: என்னை இவ்வழக்கில் சிக்க வைத்ததில் பெங்களூர் காவல்துறையில் உயர் அதிகாரிகளின் சதித்திட்டம் அடங்கியுள்ளது. மிகவும் திறமை வாய்ந்த அதிகாரிகளை நியமித்து நாட்டில் நடந்த ஏதேனும் குண்டுவெடிப்புகளிலோ, தாக்குதல்களிலோ தொடர்பு இருக்கிறதா? என்பதுக் குறித்து தீர விசாரிக்கவேண்டும். அதில் தேசத்துரோகம், தீவிரவாதம் தொடர்பாக எனது பங்கு சிறிதளவேண்டும் கண்டுபிடிக்கப்பட்டால் என்னை தூக்கிலிடுங்கள். விசாரணையில் நான் நிரபராதி என்பது நிரூபணமானால், தீவிரவாத முத்திரையில் இருந்து விடுதலை அளித்து வாழ அனுமதிக்கவேண்டும். விசாரணையின் பெயரால் சித்திரவதைகளையும், பொய்கள் நிறைந்த ஊடக விசாரணையும் நிறுத்தப்படவேண்டும்.நிரந்தரமாக கொடிய ஊடக பரப்புரைகளை அனுபவித்தும், தீவிரவாத-பயங்கரவாத முத்திரைகள் குத்தியும் என்னையும், எனதுகுடும்பத்தினரையும் சந்தேகத்தின் நிழலில் நிறுத்தியிருக்கும் இந்த வாழ்க்கையை விட ஆயிரம் மடங்கு நான் விரும்புவது உயர்ந்த மரணமாகும்.அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர குடியரசு தலைவர் என்ற நிலையில் உங்களால் முடியும் என்று நான் கருதி கோரிக்கை வைக்கிறேன்.
சிறைவாசம் எனது வலது கண்ணின் பார்வை சக்தியை முழுமையாகவும், இடது கண்ணின் பார்வை சக்தியை 75 சதவீதமும் இழக்கச் செய்துள்ளது. போலீசுக்கு மிகவும் விருப்பமான ‘தீவிரவாத வேடமான’ தொப்பியும், தாடியும் கொண்ட என்னை வீல் சேரில் இருத்தி பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்வதும், பொய்யான செய்திகளை பரப்பி தங்களது’தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு’ ஆக்கம் கூட்டுகின்றனர்.
நான் பிறந்த மாநிலம் என்னை தீவிரவாதியாகவோ, பயங்கரவாதியாகவோ காணவில்லை.எனது மாநில மக்களுடன் சேர்ந்து பிறந்த நாட்டின்நன்மைக்காகவும், சமூகத்தில் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கும் வேண்டி வாழ்க்கையின் இறுதி வரை சேவை பணிகளில் ஈடுபடவேண்டும் என்று இந்திய குடிமகன் என்ற நிலையில் எனக்கு அதிகமான ஆர்வம் உண்டு.
இவ்வாறு அப்துல் நாஸர் மஃதனி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக