‘‘கிரிமினல் குற்றவாளிகளுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்பட மாட்டாது’’ என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக அறிவித்தார். ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், முதல்–மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க துடிப்புடன் வேலைகளை தொடங்கி விட்டது.
இதன் ஒரு கட்டமாக, காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2 நாட்களாக அந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து, கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து ஆய்வு செய்தார். நேற்று முன்தினம் பிகானீர் நகரத்திலும், நேற்று ஜெய்ப்பூரிலும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், சமீபத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டெல்லி புறப்படுவதற்கு முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வேட்பாளர்கள் தேர்வு செய்வது, டிக்கெட் கொடுப்பது ஆகியவை நமது உள்கட்சி விவகாரம்தான். ஆனாலும், கிரிமினல் குற்றவாளிகளுக்கு டிக்கெட் கொடுக்காமல் அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும்.
நாம் அமைக்கும் அரசாங்கங்களுக்கு ஒரே குறிக்கோள்தான். அதாவது, மக்கள் நலத்திட்டங்களை வகுத்து செயல்படுவதுடன் மக்களுக்கான அரசாக இயங்க வேண்டும். இந்த மாநிலத்தில் அசோக் கெலாட் அந்த வகையில் மக்கள் அரசாக செயல்பட்டு, நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். ஆகவே, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நமது கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி.
கட்சியில், தொண்டர்களின் குறிப்பாக இளைஞர்கள், பெண்களின் கருத்தை கேட்டு, அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். கட்சியில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை களைய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக