தீவிரவாத வழக்குகளில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்குகளை முடிக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்களை அமைக்குமாறு மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தவறான முறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து, இவர்களில் குற்றம் செய்யாதவர்களை விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி ரகுமான் கான், உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டேவை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வலியுறுத்தி இருந்தார்.
இதன் விளைவாக, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு 39 சிறப்பு கோர்ட்டுகளை அமைத்துள்ளதாக மத்திய உள்துறை இணைமந்திரி ஆர்.பி.என்.சிங் இரு வாரங்களுக்கு முன்னர் அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே, 'தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்கு விரைவு நீதிமன்றங்களை அமைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தீவிரவாத வழக்குகள் தொடர்பாக மாநில சிறைகளில் எத்தனை பேர் அடைக்கப்பட்டுள்ளனர்? அவர்கள் எவ்வளவு காலமாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்? என்பது தொடர்பான தகவல்களையும் மாநில அரசிடம் மத்திய அரசு கேட்டுள்ளது' என்றார்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக