கோடம்பாக்கம் மேம்பாலத்தின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து, ஜூலை 15-ம் தேதி மீண்டும் திறக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோடம்பாக்கம் மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகியதால், அதனை சீரமைக்கும் பணிகள் சில மாதங்களாக நடந்து வருகின்றன. மேம்பாலத்தின் தூண்களை வலுப்படுத்தி, அதை சற்றே உயர்த்தும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. ரயில்வே துறையிடம் அனுமதி பெற்று முடிக்க வேண்டிய சில பணிகள் மட்டும் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.
புதிய இயந்திரம்
அதே போல், மேம்பாலத்தின் மீது கான்கிரீட் சாலை போடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே போடப்பட்டிருக்கும் சாலையை மில்லிங் மெஷின் எனப்படும் இயந்திரம் கொண்டு, தகர்த்து எடுத்து புதிய சாலை போடப்படுகிறது. இந்த பணிகளை துரிதப்படுத்த, தற்போது பயன் படுத்தும் இயந்திரத்தை விட மூன்று மடங்கு வேகமாக செயல்படும் இயந் திரம் ஒன்று புதிதாக பெறப்பட்டுள் ளது. ஒரு தூணுக்கும் மற்றொரு தூணுக்கும் இடையே உள்ள சாலையை பழைய இயந்திரத்தின் மூலம் தகர்த்து எடுக்க, மூன்று நாட்கள் ஆகும். ஆனால், புது இயந்திரத்தின் உதவியால் ஒரே நாளில் இப்பணி களை முடிக்க முடியும். ஆனால், அந்த இயந்திரத்தின் பளுவை மேம்பாலம் தாங்குமா என்று பரிசீலித்த பிறகே, அது பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
மேம்பால சீரமைப்பு பணிகள் தொடங்குவதற்கு முன்பே, கடந்த நவம்பர் மாதம் முதல், கோடம்பாக்கம் மேம்பாலம் மூடப்பட்டு ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் மட்டும் மேம்பாலத்தின் மேல் அனுமதிக்கப்பட்டது, கோடம்பாக்கம் ரயில் நிலையம் செல்லும் வழியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “மேம்பாலத்தின் ஒரு புறம் இந்த பணிகள் முடிக்கப்பட்ட பிறகு, போக்குவரத்து காவல்துறையிடம் பேசி, ஜூன் 15-ம் தேதிக்கு பிறகு ஒரு வழிப்பாதையாக இயங்கும். அதன் பிறகு, சீரமைப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்த பிறகு, ஜூலை 15-ம் தேதி முதல் இரு வழிப் பாதையாக இயங்கும்,” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக