சென்னை: மானாமதுரை அருகே என்கவுன்டரில் இரண்டு பேர் கொல்லப்பட்டது சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில், நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. காவல்துறை துணை ஆய்வாளர் ஆல்பின் சுதன் கொல்லப்பட்ட வழக்கில் பிரபு, பாரதி ஆகிய இருவர், கைதாகி இருந்தனர். கடந்த நவம்பர் 30 ஆம் தேதியன்று அவர்கள் இருவரும் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறியது.
இது தொடர்பாக சென்னை உயர்நீமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி, கடந்த ஆறு ஆண்டுகளில் 32 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி என்கவுன்டரில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், ஆனால் எந்த அதிகாரி மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மாறாக, என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்குகள் மூடப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். எனவே, டிஎஸ்பி வெள்ளத்துரை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், என்கவுன்டர் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் புகழேந்தி கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக