அகமதாபாத்: குஜராத் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல்,15 மாவட்டங்களில் உள்ள 87 தொகுதிகளில் இன்று நடக்கிறது. முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் பதவிக் காலம் முடிவதையொட்டி, சட்டசபைக்கு டிசம்பர் 13, 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மொத்தமுள்ள 182 சட்டசபை தொகுதிகளில் 15 மாவட்டங்களில் அடங்கிய 87 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.இன்றைய தேர்தலில் 46 பெண்கள் உள்பட 846 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்கட்ட தேர்தலில் 3.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்காக 45 ஆயிரம் வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3 முறை குஜராத்துக்கு பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது, மோடி அரசை கடுமையாக விமர்சித்தார். பாமர மக்களை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை, மத்திய அரசு நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளை கூறினார்.
பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஷிண்டே உள்ளிட்டோரும் குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்டு காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினர். மணி நகர் தொகுதியில் மோடி போட்டியிடுகிறார். 17 ம் தேதி நடக்கும் 2வது கட்ட தேர்தலில் அங்கு வாக்குப்பதிவு நடக்கிறது.20ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக