ஹைதராபாத்:சட்டவிரோத சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன் மோகன் நேற்று கைது செய்யப்பட்டார். ஜெகனின் கைதையொட்டி ஆந்திர மாநிலம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெகனின்
ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என கருதி முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவுக்கு சமமான சூழலை காவல்துறை உருவாக்கியுள்ளது. பல்வேறு நகரங்கள், கடப்பா போன்ற பகுதிகளில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பை நடத்தினர். கடைகளை போலீஸ் வலுக்கட்டாயமாக மூட வைத்தனர். ஆந்திரபிரதேச மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளின் சேவையின் பெரும்பகுதி ஞாயிற்றுக்கிழமை மாலை நிறுத்தப்பட்டது.
ஜெகன் மோகன் ரெட்டியின் கைதை இரவு ஏழரை மணிக்கு சி.பி.ஐ, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரிவித்தது. கடந்த 3 தினங்களாக ஜெகனிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தி வந்தது.
விசாரணை நடத்த தில்குஷா விருந்தினர் மாளிகைக்கு ஜெகனை அழைத்த சி.பி.ஐ, அநியாயமாக அவரை கைது செய்ததாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர்களான பி.கோவர்தன், ஜுபுடி பிரபாகர் ராவ் ஆகியோர் குற்றம் சாட்டினர்.
ஜெகனை கைது செய்யும் முன்பு அவரை சந்திக்க தாயாரும், ஒய்.எஸ்.ஆர் கெளரவ தலைவருமான விஜயம்மா, ஜெகனின் மனைவி பாரதி, சகோதரி ஷர்மிளா, சகோதரியின் கணவர் அனில்குமார் ஆகியோர் விருந்தினர் மாளிக்கைக்கு வந்தனர்.
சி.பி.ஐ வழக்குகள் தொடர்பாக இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஜெகன் ஆஜர்ப்படுத்தப்படுவார். இன்று ஆஜராக ஜெகன் மோகன் ரெட்டிக்கு முன்னரே நீதிபதி சம்மன் அனுப்பியிருந்தார்.
ஜெகன் மோகனுக்குச் சொந்தமான சாக்ஷி டெலிவிஷன், ஜாக்ருதி பதிப்பகம் ஆகியவற்றுக்குப் பணம் வந்த விதம் குறித்து அவர் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை என்று சி.பி.ஐ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தன்னை கைது செய்ததன் பேரில் வன்முறைகள் ஏற்படக்கூடாது என ஜெகன் தனது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக