வியாழன், மே 31, 2012

இட ஒதுக்கீடு:தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகும் !

Govt. stands firm on 4.5 percent sub-quota for minorities; to move Supreme Courtபுதுடெல்லி:உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் சிறுபான்மை சமூகத்தினருக்கு 4.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு தடை விதித்த ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடுச் செய்ய உள்ளது.வேலைவாய்ப்புகளிலும், கல்வித்துறையிலும் சிறுபான்மை
சமூகத்தினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்குவதற்கான மத்திய அரசின் உத்தரவு, மதத்தின் அடிப்படையிலானது என்றும், ஆகையால் அதனை அமல்ப்படுத்த தேவையில்லை என்றும் கடந்த திங்கள் கிழமை ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இதுக்குறித்து அவர் கூறியது:
ஆந்திர உயர் நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்பை எதிர்த்து சிறப்பு மனு ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். இதனை விரைந்து செய்வோம். அடுத்த வாரம்தான் அட்டர்னி ஜெனரல் வருகிறார். அவர் வந்தவுடன் இந்த விவகாரத்தை எவ்வாறு எடுத்துச் செல்லலாம் என்பது குறித்து விவாதிப்போம். இதனை எவ்வளவு விரைவாக செய்ய முடியுமோ அத்தனை விரைவாகச் செய்வோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இடஒதுக்கீட்டுக்கான அடிப்படையாக மதத்தைக் கொள்ள முடியாது. சிறுபான்மையினர் என்பது மத ரீதியில் மட்டுமல்ல மொழி அடிப்படையிலும் பார்க்கப்படக் கூடியதே. எனவேதான், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என நீதிமன்றம் சரியாகவே கூறியிருக்கிறது. ஆனால், நாங்கள் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கான இடஒதுக்கீட்டில்தான் உள் ஒதுக்கீடு கோரினோம். ஆனால், மதச் சிறுபான்மையினர் அனைவரும் ஒரேவகையான இனக் குழுக்கள் என்பதையோ; சிறப்புச் சலுகை தேவைப்படும் அளவுக்கு அவர்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பதையோ நிரூபிக்கும் ஆதாரம் எதையும் மத்திய அரசு சமர்ப்பிக்கவில்லை என்று ஆந்திர உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது என்றார் சல்மான் குர்ஷித்.
ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பா.ஜ.க வரவேற்றுள்ளது. முஸ்லிம்கள் முன்னேறுவதையோ அவர்களது வளர்ச்சியையோ பொறுத்துக் கொள்ளவியலாத சங்க்பரிவாரத்தின் அரசியல் முகமூடியான பாரதீய ஜனதா கட்சிக்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பு குதூகலத்தை ஏற்படுத்திவிட்டது.
கல்வி நிலையங்களிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும் முஸ்லிம்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டை வழங்குவதற்கான அனைத்து அறிவிக்கைகளையும் ஆந்திர அரசு வாபஸ் பெறவேண்டும் என பா.ஜ.கவின் ஆந்திர மாநில பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.கவின் ஆந்திர மாநில தலைவர் ஜி.கிஷன் ரெட்டி, பொதுச்செயலாளர் என்.ராமச்சந்தர் ராவ் ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக