சென்னை: பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து பாஜக அழைப்பு விடுத்த பாரத் பந்த் தமிழகத்தில் படுதோல்வியடைந்தது. பஸ்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. பள்ளி, கல்லூரிகள் திறந்துள்ளன.
அரசு, தனியார் அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படுகின்றன.இன்று பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடும் என்றும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முழு அடைப்புக்கு பால் முகவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் இன்று கடை அடைப்பு இல்லை என்று வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. த.வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கங்களின் பேரவை மட்டுமே கடை அடைப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்களும் திறந்துள்ளன.
தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் டி.ஜி.பி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார். இதனால் நேற்று இரவில் இருந்தே சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு விடிய, விடிய வாகன சோதனை நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பஸ் டெப்போக்கள், ரயில் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். திறந்திருக்கும் கடைகளை அடைக்கச் சொல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணிகளில் சுமார் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக