வியாழன், மே 24, 2012

ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் மாணவர்களிடம் வசூல்... பள்ளி முதல்வர் அதிரடி கைது !

 Srivilliputhur Lions School Principal Arrested ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் மாணவர்களிடம் பெருமளவில் பண வசூலில் ஈடுபட்டதாக கூறி, ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரபலமான லயன்ஸ் பள்ளியின் முதல்வர் ராஜேந்திரனை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்ஜிஓ காலனியில் உள்ள ஸ்ரீவி லயன்ஸ் பள்ளி. இப்பள்ளியின் முதல்வராக செயல்பட்டு வருபவர் ராஜேந்திரன். கடந்த 30 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில் கிட்டத்தட்ட 3000 பேர் பயில்கிறார்கள்.

கடந்த 3 ஆண்டுகளாக ராஜேந்திரன் முதல்வராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஸ்மார்ட் கிளாஸ் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு ஒவ்வொரு மாணவரும் பணம் தர வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் அறிவித்தது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. பல்வேறு போராட்டங்களும் நடந்தன.

இதையடுத்து மறு அறிவிப்பு வரும் வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இருப்பினும் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கட்டாய வசூல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ராஜேந்திரனை இதில் நேரடியாக ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு அவர் டிசியைக் கிழித்துக் கொடுத்து அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ராஜேந்திரனை சந்தித்து நியாயம் கேட்டுள்ளனர். ஆனால் ராஜேந்திரன், அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து இன்று காலை ராஜேந்திரனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

தற்போது 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராஜேந்திரன். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக