கெய்ரோ:புரட்சிக்கு பிந்தைய எகிப்தில் நடந்த முதல் அதிபர் தேர்தலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான எஃப்.ஜே.பியின் வேட்பாளர் டாக்டர்.முஹம்மது முர்ஸி முதலிடத்தையும், முபாரக் ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஷஃபீக் 2-வது இடத்தையும்
பிடித்துள்ளனர். இதன் மூலம் 2-வது கட்ட அதிபர் தேர்தலில் இருவரும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தேர்தல் கமிஷன் தலைவர் ஃபாரூக் சுல்தான் முடிவுகளை அறிவித்தார்.
மொத்தம் பதிவான 2.3 கோடி வாக்குகளில் முஹம்மது முர்ஸிக்கு 58 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. அஹ்மத் ஷஃபீக்கிற்கு 55 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹம்தீன் ஸபாஹி பிடித்துள்ளார்.
மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்ட எகிப்து அதிபர் தேர்தல் பல்வேறு விவாதங்கள், போராட்டங்களுக்கு மத்தியில் நடந்தேறியது.
வருகிற ஜூன் 16,17 தேதிகளில் எகிப்தில் 2-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு தோல்வியடைந்த வேட்பாளர்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளை இறுதிக்கட்ட தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் மேற்கொள்வார்கள்.
ஸலஃபிகளின் கட்சியான அந்நூர் இஃவான் வேட்பாளர் முஹம்மது முர்ஸிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. முதல் கட்ட தேர்தலில் 3-வது இடத்தைப் பிடித்த ஹம்தீன் ஸபாஹி, முஹம்மது முர்ஸியை ஆதரிப்பார் என கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக