ஹைதராபாத்: என் மகன் அப்பாவி, அவனைக் கைது செய்ததன் பின்னணியில் சோனியா காந்திதான் உள்ளார் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகியுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகனை மூன்று நாட்களாக விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரைக் கைது செய்தனர். இதனால் ஆந்திராவின் பல மாவட்டங்களில் பதட்டம் நிலவுகிறது. ஆந்திரா மற்றும் ராயலசீ்மாவில் உள்ள சில பகுதிகளில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கேபிள் டிவி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பதட்டம் நிலவினாலும் இதுவரை அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெற்றதாக தகவல் இல்லை. இருப்பினும் தெலுங்கானா பகுதியில், ஜெகன் கைதால் எந்தவித பாதிப்பும் இல்லை.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டு கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஜெகன் மோகன் ரெட்டியை அவரது தாயாரும், மறைந்த ராஜசேகர ரெட்டியின் மனைவியுமான விஜயலட்சுமி நேற்று பார்த்துப் பேசினார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜூன் 12ம் தேதி நடைபெறவுள்ள 18 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் ஒரு லோக்சபா தொகுதிக்கான இடைத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவதற்காகவே ஜெகனை முடக்கியுள்ளனர் காங்கிரஸார். இந்தத் தேர்தலில் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம். நானே நேரடியாக பிரசாரத்தில் ஈடுபடப் போகிறேன்.
எனது மகன் செய்த ஒரே தப்பு, தனது தந்தை இறந்த பின்னர் தற்கொலை செய்து கொண்ட நூற்றுக்கணக்கான தொண்டர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் செல்ல யாத்திரை போனதுதான். எனது மகன் கைது பின்னணியில் சோனியா காந்திதான் உள்ளார். இந்தக் கைதுக்கு அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் விஜயலட்சுமி.
முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார், சகோதரி ஷர்மிளா, மனைவி பாரதி உள்ளிட்ட ஜெகன் குடும்பத்தினர் பெரும் திரளாக கெஸ்ட் ஹவுஸ் முன்பு தர்ணா போராட்டத்தில் குதித்தனர். அவர்களைப் போலீஸார் கைது செய்து வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி அவரவர் வீடுகளுக்குக் கொண்டு போய் விட்டனர்.
ஜெகன் தவிர, வர்த்தகர் நிம்மிகடா பிரசாத், அரசு ஊழியர் கே.வி.பிரம்மானந்த ரெட்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஜெகன் உள்ளிட்டோர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
இவரக்ள் மீது குற்றச் சதி, நம்பிக்கை மோசடி, பொய்யான கணக்கு காடச்டியது மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13வது ஏ பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜெகன் மீது 3 குற்றப்பத்திரிக்கைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. மேலும் மூன்று குற்றப்பத்திரிக்கை அடுத்த சில வாரங்களில் பதிவாகும் என்று தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக