செவ்வாய், மே 22, 2012

அணுமின் நிலையங்களின் சுற்றுவட்டாரங்களில் புற்றுநோயின் சாத்தியம் குறித்து முழுமையான ஆய்வு துவக்கம்!

புதுடெல்லி:இந்தியாவில் அணுமின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளின் சுற்று வட்டாரங்களில் வசிப்பவர்களிடம் உருவாக வாய்ப்புள்ள புற்றுநோய் உள்ளிட்ட நோய்களைக் குறித்து மிக கவனமான ஆய்வு நடைபெறவுள்ளது.
மும்பையில் டாட்டா மெமோரியல் செண்டர் இதற்கான பணிகளை துவக்கியுள்ளது. ஆய்வின் ஒரு பகுதியாக அணுசக்தி நிலையங்களின் சுற்று வட்டாரங்களில் வசிப்பவர்களின் முழு விபரங்கள் அடங்கிய பதிவேடு தயாராகும்.

அணுமின்நிலையங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் புற்றுநோய், பிறவியிலேயே ஏற்படும் பாதிப்புகள், இதர நோய்கள் ஆகியன குறித்து மிக கவனமாக ஆய்வு நடத்தப்படும். அணுமின் நிலையங்களின் அருகில் வசிக்கும் மக்கள் ஆரோக்கியம் தொடர்பான அச்சுறுத்தலை சந்திப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
ஆய்வில் சேகரிக்கப்படும் விபரங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு, மதிப்பீடுச் செய்யப்படும். கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இவ்விடங்களில் வசிக்கும் மக்களிடம் ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்க இந்த நடைமுறை பின்பற்றப்படும்.
இது அணுக்கதிர் வீச்சு மூலம் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் குறித்து இந்தியாவில் முதன் முதலாக நடத்தப்படும் ஆய்வாகும்.
அணுமின்நிலையங்கள் வசிப்பிட சூழலுக்கும், மனிதர்களுக்கும் கடுமையான ஆரோக்கிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதை பல்வேறு ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. ஆனால், முன்னர் தமிழ்நாட்டின் கல்பாக்கம் அணுமின்நிலையத்தின் எட்டு கிலோமீட்டர் சுற்று எல்லையில் உள்ள 22 கிராமங்களில் வசிக்கும் 22,345 பேர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு தேசிய சராசரியை விட குறைவானது என்பது கண்டறியப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக