வியாழன், மே 24, 2012

விலை உயர்ந்தவுடன் கதவை மூடிய பங்குகள் - மக்கள் பெரும் கொந்தளிப்பு, கொதிப்பு !

 Bunks Go Dry After The Announcement Of Price Hike
 சென்னை: பெட்ரோல் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியான உடனேயே சென்னையிலும் தமிழகத்தின் பிற நகரங்களிலும் வேகம் வேகமாக பெட்ரோல் பங்குகளை மூடியதால் பெட்ரோல் போடுவதற்காக விரைந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதனால் கொதிப்படைந்த மக்கள் சென்னையில் சாலைகளை முற்றுகையிட்டு பெரும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
வழக்கமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதாகஇருந்தால் குறைந்தது ஒரு நாளைக்கு முன்பாவது தெரியப்படுத்தப்படும். ஆனால் நேற்று அதிரடியாக லிட்டருக்கு ரூ. 7.50 உயர்வதாக இரவு 7 மணியளவில்தான் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும் நள்ளிரவு 12 மணி முதல் விலை உயர்வு அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டது.

இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இப்போதே பெட்ரோல் போட்டுக் கொள்ளலாம் என்று வாகனங்களுடன் பங்குகளுக்குப் பறந்தனர். பலர் ஏராளமான கேன்களையும் கையில் எடுத்துக் கொண்டு வந்தனர்.

ஆனால் பல பங்குளை அதற்குள்ளாகவே மூடி வைத்திருந்தனர். பெட்ரோல் ஸ்டாக் இல்லை என்று படு கேவலமான ஒரு போர்டையும் வைத்திரு்நதனர். ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வால் கொதிப்படைந்திருந்த மக்கள் இப்படி பங்குகளை மூடி வைத்திருந்ததைப் பார்த்து மேலும் கொந்தளித்தனர். தங்களது வாகனங்களை சாலைகளில் நடுவில் நிறுத்தி வைத்து போராட்டங்களில் குதித்தனர். மத்திய அரசைக் கண்டித்து கடுமையாக கோஷமிட்டனர்.

பெட்ரோல் போதுமான அளவில் இருந்தபோதும் கூட பழைய விலைக்கு வாங்கிய பெட்ரோலை புதிய விலைக்கு விற்றால் கூடுதல் காசு பார்க்கலாம் என்ற நப்பாசையில்தான் இப்படி செயல்பட்டன பெட்ரோல் பங்குகள். இதனால் வாகனதாரிகள்தான் கடும் பாதிப்புக்குள்ளானார்கள்.

சில பங்குகளில் நீண்ட வரிசையில் நின்றபடி மக்கள் பெட்ரோல் போட்டுச் சென்றனர். பெட்ரோல் பங்குகளின் இந்த செயலை அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும், இப்படி கிரிமினல்தனமாக செயல்படும் பங்குகளின் உரிமத்தை அரசு ரத்து செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்போதெல்லாம் விலை உயர்கிறதோ, அப்போதெல்லாம் இப்படிச் செயல்படுவதை பெட்ரோல் பங்குகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன என்று மக்கள் குமுறலுடன் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக