ஐநா மற்றும் அரபு லீக் தூதர் கோபி அன்னான் இன்று சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸத்தை சந்தித்து பேசினார். சிரியாவில் நிலவும் கொடும் வன்முறைகள் குறித்து சர்வதேச சமூகம் கவலைக்குள்ளாகி இருப்பதை பஷாருக்கு கோபி அன்னான் தெரிவித்துள்ளதாக அவருடைய செய்தித் தொடர்பாளர் அஹமத் பவ்ஷி குறிப்பிட்டுள்ளார். நேற்று சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் வந்த கோபி அன்னான், முன்னதாக சிரிய வெளியுறவுத் துறை அமைச்சரையும், ஐநா பார்வையாளர்களையும் சந்தித்து
உரையாடினார். கோபி அன்னான் ஐநா சபையின் முன்னாள் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளி அன்று ஹோலா நகரில் நடைபெற்ற படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கருத்து தெரவித்த இது சம்பந்தமாகவும் பஷாரிடம் வெளிப்படையாக பேச இருப்பதாக கூறினார்.
அன்னானுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் முஅல்லம், சிரிய அரசு எடுத்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகளை குலைப்பதற்காக கலகக்காரர்கள் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். தீவிரவாதிகள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதோடு, அவர்களுக்கு ஆயுதங்கள் உதவி செய்பவர்களும் நிறுத்தினால்தான், அன்னானுடைய சமாதான திட்டம் வெற்றி பெறும் என பஷார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பஷாருக்கு எதிராக மார்ச் 2011 முதல் தினமும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஏறத்தாழ 13000 பொது மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.இதனிடையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், கனடா உள்ளிட்ட நாடுகள் சிரியத் தூதர்களை தங்களது நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக