செவ்வாய், மே 22, 2012

சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தலைவர் ஈரானில்: பேச்சுவார்த்தை துவக்கம்!

டெஹ்ரான்:அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தலைவர் யூகியோ அமானோ ஈரானுக்கு வருகை தந்துள்ளார். அதிகாலையில் டெஹ்ரானுக்கு வருகை தந்த அமானோ, ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஈரான் அணுசக்தி ஏஜன்சி தலைவர் ஃபிர்தவ்ன் அப்பாஸி தவானியுடன் பேச்சு வார்த்தை நடத்திய அமானோ, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலேஹி மற்றும் ஈரான் முக்கிய அணுசக்தி மத்தியஸ்தர் ஸஈத் ஜலீலி ஆகியோருடன் சந்திப்பை நடத்தினார்.

ஈரானுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் தன்னம்பிக்கை உள்ளது என்றும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சரியான வேளை இது என்றும் அமானோ தெரிவித்தார்.
டெஹ்ரானுக்கு புறப்படும் வேளையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அவர். ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து புதன்கிழமை ஈராக் தலைநகரான பாக்தாதில் ஆறு பெரிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கும் வேளையில் சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தலைவர் டெஹ்ரானுக்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னர் 2 தடவை ஈரான் தலைமையுடன் சர்வதேச அணுசக்தி ஏஜன்சி பிரதிநிதிகள் குழு பேச்சு வார்த்தை நடத்தியபோதிலும் பலன் ஏற்படவில்லை.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டாகும். இதன் பெயரால் ஈரான் மீது தடை விதித்தது பிரச்சனையை மேலும் சிக்கலில் ஆழ்த்தியது. அணுசக்தி திட்டங்கள் அமைதியான எரிசக்தி தேவைகளுக்கு மட்டுமே என்று ஈரான் அழுத்தமாக கூறிவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக