கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழுவினர் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் இருப்பது மட்டுமின்றி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இன்று தமிழகத்தில் உள்ள 15 மாவட்ட கடற்கரை கிராமங்களில் மத்தியஅரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டமும், கல்லறையில் புகும் போராட்டமும் நடத்தப்படும் என்று உதயகுமார் அறிவித்தார். அதன்படி அந்த போராட்டம் இன்று நடந்தது. அணு உலை எதிர்ப்பாளர்கள் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்புளி, பெருமணலில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கு திரண்டு சென்றனர். பின்பு அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள முன்னோர்களின் கல்லறைகளின் முன் நின்று ஜெபம் செய்து தங்களின் கோரிக்கைகளை முறையிட்டனர்.
கூத்தங்குழியில் நடந்த போராட்டத்திற்கு உதயகுமார் தலைமைதாங்கினார். கூடங்குளம், இடிந்தகரை, பெருமணல், கூத்தங்குளி பகுதியில் நடந்த போராட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுமார் 800 பேர், பங்குத் தந்தைகள் ஜோசப், அமலன் ஆகியோர் தலைமையில் கல்லறை புகும் போராட்டம் நடந்தது.
கூடங்குளம் அணுஉலையை நிரந்தரமாக மூட வேண்டும் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புகொடி ஏந்தியபடி அவர்கள் அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக