சனி, செப்டம்பர் 29, 2012

கஷ்மீர் மக்களின் கண்ணியமான வாழ்வை உறுதிச்செய்வோம் – குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி !

ஸ்ரீநகர்:வன்முறை எனும் இருள் கடந்து போனதாக இருக்கட்டும். புதிய விடியலை உருவாக்க பாடுபடுவோம் என்று கஷ்மீர் மக்களுக்கு இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்புவிடுத்துள்ளார். ஜம்மு கஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள கஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியது: “ஜம்மு-கஷ்மீரில் உள்ள அனைவரும் சம
அந்தஸ்துடன், சமமான வாய்ப்பு பெற்று கண்ணியத்துடன் வாழ வேண்டுமென்பதில் மத்திய அரசும் மாநில அரசும் உறுதிபூண்டுள்ளது. இங்கு பல மனக்குறைகள் இருப்பது எனக்குத் தெரியும். முக்கிய பிரச்னைகள் விரைவாகவும் நுட்பமாகவும் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. வன்முறை மூலம் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது. அனைவரையும் உள்படுத்தும் வளர்ச்சி மூலம் உருவாகும் நாளைய இந்தியாதான் கஷ்மீரி இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை அளிக்கப் போகிறது. அவர்கள் அதை ஏற்க வேண்டும். இனியும் காலம் தாழ்த்தக் கூடாது. இந்தியாவின் புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஜம்மு-கஷ்மீர் வழிகாட்ட வேண்டும். வேகமாக மாறி வரும் உலகில் இந்தியா பின் தங்கிவிடக் கூடாது. இந்தியாவின் முன்னேற்றத்தில் கஷ்மீரின் பங்கு மிக முக்கியமானது. வன்முறை எனும் இருள் கடந்துபோனதாக இருக்கட்டும். புதிய விடியல் வரட்டும். சிறந்த ஜனநாயக நிறுவனங்கள், அரசியல் சாசனம் எனும் மிக உயர்ந்த சட்டம் ஆகியவை ஆட்சி செலுத்தும் எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடனும் உறுதியுடனும் முன்னோக்கிச் செல்வோம்.
கஷ்மீர் என்பது கல்வியின் இருப்பிடமாக இருந்துள்ள பெரும் பாரம்பர்யம் உள்ள இடம் இது. பெரும் கல்விமான்களையும் கவிகளையும் இந்தப் பள்ளத்தாக்கு பேணியுள்ளது. பல அன்னிய நாகரிகங்களைச் சேர்ந்த ஞானிகளும் அறிஞர்களும் இங்கு வந்து தங்களது அறிவைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்தப் பாரம்பர்யத்தை உணர்ந்து அவற்றிலிருந்து இப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களும் மாணவர்களும் பயன் பெறுவார்கள் என நான் நம்புகிறேன்” என்று தனது உரையில் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சையது அலி ஷா கிலானி மற்றும் கஷ்மீர் அமைப்புகள் வியாழக்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
முழு அடைப்பு நடைபெற்றதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகள், கடைகள், வணிக நிறுவனங்கள் மூடியிருந்தன. கஷ்மீர் பள்ளத்தாக்கில் அரசு பஸ்கள் ஓடவில்லை. தனியார் வாகனங்கள் மட்டும் ஓடின. சுயேச்சை எம்.எல்.ஏ.யான ஷேக் அப்துல் ரஷீத் தனது ஆதரவாளர்களுடன் ரீகல் சதுக்கத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார். பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் கருணை மனுவைப் பரிசீலிப்பது தொடர்பாக இவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக