சனி, செப்டம்பர் 29, 2012

ராஜ் தாக்கரேக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் – டெல்லி மாநகர் நீதிமன்றம் !

புதுடெல்லி:வட இந்தியர்கள் குறிப்பாக பீகார் மாநிலத்தவர்களை குறித்து இழிவாக பேசிய மஹராஷ்ட்ரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை டெல்லி மாநகர நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. வடமாநில மக்களை இழிவாக பேசிய ராஜ்தாக்கரே மீது ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நீதிமன்றங்கள் தாக்கேரவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை அவர் தாக்கல்
செய்தார். அதில் பீகார், ஜார்க்கண்டில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் வழக்கை டெல்லிக்கு மாற்ற வேண்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்குகள் கடந்த ஆண்டுடெல்லி மாநகர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.
வட இந்தியர்களை தவறாகப் பேசியது குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க தாக்கரேவுக்கு ஆகஸ்ட் 30ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால்,நேரில் ஆஜராகி விளக்கமளிப்பதற்கு தனக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று தாக்கரே கோரியிருந்தார்.
இதனை நிராகரித்த டெல்லி கூடுதல் முதன்மை மாநகர நீதிபதி மணிஷ் யதுவான்ஷி தாக்கரேவுக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவைப் பிறப்பித்தார். நவம்பர் 17ஆம் தேதிக்குள் தாக்கரேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக