சனி, செப்டம்பர் 29, 2012

பிரதமர் மன்மோகன் சிங்கை கேலி செய்த மம்தாபானர்ஜி மீது சட்ட நடவடிக்கை. காங்கிரஸ் முடிவு !

தனியார் 'டி.வி.'க்கு மம்தா பானர்ஜி பேட்டி அளித்தபோது, பிரதமர் மன்மோகன்சிங் போல் மிமிக்ரி செய்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் விலகியது. மந்திரி சபையில் இருந்தும் வெளியேறியது. மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜி அறிவித்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று அவரிடம் பேட்டி கண்டது. அப்போது அவர் கூறியதாவது:-
 
டீசல் விலையை உயர்த்துவது குறித்தோ, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்தோ எங்களுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமோ அல்லது காங்கிரஸ் கட்சியோ கலந்து ஆலோசிக்கவில்லை.
 
இந்த இரண்டு விஷயங்கள் தான், நாங்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ள முக்கிய காரணங்கள் ஆகும். பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்க ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை பிரதமர் கூட்டுவது வாடிக்கை. கூட்டம் தொடங்கியதும், நம்முன்னே இந்த பிரச்சினைகள் உள்ளன; அந்த சிக்கல்கள் இருக்கின்றன. எனவே இவை பற்றி பின்னர் விவாதிப்போம் என்று கூறி விடுவார். மற்ற படி எதுவும் நடக்காது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
பேட்டியின் போது, பிரதமர் மன்மோகன்சிங்கை பல இடங்களில் கேலி செய்தார். மேலும் அவர் போல் மிமிக்ரி செய்தும் காட்டினார்.   மம்தாவின் இந்த கிண்டல் பேட்டி, காங்கிரஸ் கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 
இதுபற்றி மேற்குவங்காள காங்கிரஸ் எம்.பி. தீபாதேஸ் முன்ஷி கூறுகையில், பிரதமர் மன்மோகன்சிங் போல் மிமிக்ரி செய்து, அவரை கிண்டல் பண்ணிய மம்தா பானர்ஜிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக