சனி, செப்டம்பர் 22, 2012

நடுரோட்டில், இரவு-பகலாக, 40 மணி நேரம் போராடி ராஜபக்சேவை அலறடித்த வைகோ !

 Vaiko Continues Protest Against Rajapakse Visit சாஞ்சி: மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வருகை தந்த ராஜபக்சேவை எதிர்த்து அங்கு நாற்பது மணி நேரத்திற்கும் மேலாக வைகோ போராடி கைதானார். இரவு பகலாக போராடிய வைகோவிற்கு உள்ளூர் மக்களின் ஆதரவும் கிடைத்தது. இரவில் கொட்டும் பனி, பகலில் சுட்டெரிக்கும் வெயில் இதை எவற்றையும் பொருட்படுத்தாமல் சாஞ்சிக்கு வரும் ராஜபக்சேவிற்கு கறுப்புக் கொடி காட்டவேண்டும் என்ற நோக்கத்திற்காக போராடினார் மதிமுக பொதுச் செயலாளார் வைகோ
அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், உள்ளூர் இளைஞர்களும் அமர்ந்திருந்தனர். சாலையின் இரு பக்கமும் தொண்டர்கள் அமர்ந்திருக்க இரண்டடி இடைவெளியில் அவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய பிரதேச போலீசார் அமர்ந்திருந்தனர். இதனால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது.
"மலரட்டும் மலரட்டும் தமிழ் ஈழம் மலரட்டும்", "சர்வதேச குற்றவாளி கூண்டில் ராஜபக்சேவை ஏற்றுவோம்" உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பிய வைகோ, தமிழர்களையும், தமிழினத்தையும் கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு இங்கிருந்தே கறுப்புக் கொடி காட்டுவோம் என்று கூறினார்.
இதனையடுத்து கூடியிருந்த தொண்டர்கள் அனைவரும் ராஜபக்ஷேவின் போஸ்டர்களை கையில் வைத்துக்கொண்டு ராஜபக்சேவிற்கு எதிராக முழக்கமிட்டனர்.
ராஜபக்சே சாஞ்சியில் அடிக்கல் நாட்டும்போது வைகோவும் தொண்டர்களும் திட்டமிட்டபடி மாநில எல்லையில் இருந்தே கருப்புக்கொடி காட்டினார்கள். பின்னர் ராஜபக்சேவின் உருவப் பொம்மையை எரித்தனர். மதிமுக தொண்டர்களும் தங்களின் கைகளில் வைத்திருந்த ராஜபக்சேவின் போஸ்டர்களை எரித்தனர்.
இதனையடுத்து வைகோவையும், அவருடன் இருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் மத்தியப் பிரதேசப் போலீசார் கைது செய்தனர்.
தமிழினக் கொலையாளி ராஜபக்சே இந்தியாவிற்குள் எங்கு வந்தாலும் எதிர்ப்போம் என்று சொன்ன வைகோ, சொன்னதோடு மட்டுமல்லாமல் மத்தியப் பிரதேசத்திற்கு சென்று நாற்பது மணி நேரத்திற்கும் மேலாக போராடி தமிழர்களின் மனங்களை கொள்ளை கொண்டார் என்றால் மிகையாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக