வியாழன், செப்டம்பர் 27, 2012

அது வேற வாயி.. இது வேற வாயி''... அன்னிய முதலீடு குறித்து பாஜக அடித்த பல்டி !

ஹரியாணா மாநிலம், சூரஜ்குண்ட் நகரில் பாஜகவின் 3 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் கட்சியின் தேசிய, மாநிலத் தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உள்பட 300 செயற்குழு உறுப்பினர்களுடன் நாடு முழுவதிலும் இருந்து 1200 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய கட்காரி, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை பாஜக கடுமையாக
எதிர்க்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த முடிவை மாற்றுவோம்.
தற்போதைய சூழ்நிலையில் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரலாம் என்பதால், கட்சித் தலைவர்கள் ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்கத் தயாராக வேண்டும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு `மூழ்கும் கப்பல்'. நாட்டு மக்கள் மத்திய அரசு மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்பது நாட்டின் நலன்களுக்கோ, நமது விவசாய சமூகத்துக்கோ உகந்தது அல்ல என்பதே பாஜகவின் கருத்தாகும் என்றார்.
அவரிடம், 2004ம் ஆண்டில் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 26 சதவீத அன்னிய முதலீட்டை ஆதரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததே என்று கேட்டதற்கு, அது 8 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. எங்கள் கட்சியின் புதிய தேர்தல் அறிக்கை வரும் வரை பொறுத்திருங்கள். அதில் இவ்விவகாரம் குறித்து விரிவாக விளக்குவோம் என்றார்.
ஆனால், பாஜக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலி தளம் கட்சி அன்னிய முதலீட்டை ஆதரித்துள்ளதே என்று கேட்டதற்கு, இது தொடர்பாக, பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலுடன் தொடர்ந்து பேசுவோம். அவருடன் ஏற்கெனவே பேசியுள்ளோம். எங்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்றார் ரவிசங்கர் பிரசாத்.
ஆனால், யாரும் நினைத்த மாதிரியெல்லாம் அன்னிய முதலீடு தொடர்பான முடிவுகளை வாபஸ் பெற்றுவிட முடியாது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக சர்வதேச நிறுவனங்கள், நாடுகளுடன் இந்தியா கையெழுத்திடும் ஒப்பந்தங்களை யார் ஆட்சிக்கு வந்தாலும் ரத்து செய்துவிட முடியாது. நாட்டுக்குள் முதலீடுகள் வந்துவிடக் கூடாது என்பதைத் தடுக்கவும், முதலீட்டாளர்களை மிரட்டவுமே பாஜக இவ்வாறு பேசுகிறது.
2004ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இதே பாஜக சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்போம் என்று கூறியதே. அது ஏன் என்றார் சர்மா.
இந் நிலையில், அன்னிய முதலீடுகளை அனுமதிப்பதை ரத்து செய்வோம் என்ற பாஜகவின் கருத்துக் குறித்து நாட்டின் முக்கிய தொழிலபதிபர்கள் யாருமே கருத்துத் தெரிவிக்க மறுத்து வருகின்றனர்.
இவர்கள் செய்வது தான் உண்மையான பாலிடிக்ஸ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக