வியாழன், செப்டம்பர் 27, 2012

ஸ்பெயினில் பொருளாதார நெருக்கடி முற்றியது: போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு !

ஸ்பெயினில் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீஸôர் ரப்பர் தோட்டாக்களால் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஸ்பெயினில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணம் என்று கருதப்படுகிறது. இந்த நெருக்கடி காரணமாக லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவிக்கின்றனர். ஏராளமான குடும்பங்கள் ஏழ்மை நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளன. பொருளாதார நிலையை அரசு சரிவர கையாளாமல் இருப்பதைக் கண்டித்து, அந்நாட்டில் செவ்வாய்க்கிழமை மாபெரும் போராட்டம் வெடித்தது. தலைநகர் மாட்ரிட்டில் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்படும் சம்பளக் குறைப்புகள் மற்றும் விற்பனை வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசின் கொள்கைகள், ஏழை மக்களைக் கடுமையாக பாதித்துள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர். ஸ்பெயினின் வங்கிகளுக்கு 100 பில்லியன் யூரோ நிதியுதவி தருவதாக ஐரோப்பிய நாடுகள் அறிவித்திருப்பது அவர்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.

இதைக் கண்டித்தும், அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். "வெட்கம்', "பதவி விலகு' என்பவை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

நாடாளுமன்றக் கட்டத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள உலோகத் தடுப்புகளை உடைக்க சிலர் முயன்றனர். இதையடுத்து அவர்களை விரட்டிச் சென்ற போலீஸôர் தடியடி நடத்தி, சிலரை வேனில் ஏற்றினர்.

நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கானவர்களை போலீஸôர் விரட்டியடித்தனர். சிலர் கலைந்து செல்லாமல் தரையில் அமர்ந்தபடி மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மீது போலீஸôர் ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர். இதில், 14 பேர் காயமடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக