திங்கள், ஏப்ரல் 08, 2013

"நரேந்திரமோடிக்கு பிரதமர் பதவி எட்டாக்கனவு": மத்திய மந்திரி கபில்சிபல்!

பாரதீய ஜனதா கட்சி சார்பில், பிரதமர் பதவிக்கு குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி முன்னிலைப்படுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. ‘‘நாட்டுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’’ என்று கூறி, பிரதமர் பதவி மீதான தன் ஆசையை நரேந்திரமோடி சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஆசையை காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது.


இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான கபில் சிபல் கூறும்போது, ‘‘நரேந்திரமோடிக்கு டெல்லி (பிரதமர் பதவி) இன்னும் எட்டாக்கனவாகத்தான் உள்ளது. தேசிய அரசியலுக்கு வர விரும்புகிறவர்களுக்கு இரண்டு அம்சங்கள் தேவை. ஒன்று, அவர்கள் அர்த்தமுள்ள பேச்சைப்பேச வேண்டும். இரண்டாவது, டெல்லிக்கு வருவதில் மிகவும் அவசரம் காட்டக்கூடாது’’ என்றார்.

இதே போன்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மத்திய மந்திரியுமான மணீஷ் திவாரியும் நரேந்திரமோடியை ‘வீண் வீரம் பேசும் தீவிரவாதி’ என ஒரு சமூக வலைத்தளத்தில் சாடி இருக்கிறார். மற்றொரு மத்திய மந்திரியான ராஜீவ் சுக்லா, ‘‘மோடி பாரத மாதா பற்றி பேசுகிறார். பாரத மாதாவுக்காக சுதந்திர போராட்டத்தில் எந்தவொரு பாரதீய ஜனதா தலைவரும் ஈடுபட்டதாக நான் கருதவில்லை. பாரத மாதாவுக்கு தியாகங்கள் செய்வது எப்படி என்பதை மோடி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என கூறினார்.

டெல்லி முதல்–மந்திரி ஷீலா தீட்சித்தும் நரேந்திரமோடியை விட்டு வைக்கவில்லை. மோடி குறித்து நேற்று அவர் கூறும்போது, ‘‘ராகுல் காந்தியையும், நரேந்திரமோடியையும் ஒப்பிடக்கூடாது. ஒருவர் (ராகுல் காந்தி) மதச்சார்ப்பற்ற தலைவர். மற்றொருவர் (மோடி) மதவாத தலைவர். இவர் (மோடி) இயற்கையிலேயே ஒரு சர்வாதிகார தலைவர். அவரை கணிப்பது கடினமான ஒன்று. இவர் இந்தியாவை பிரதிபலிப்பதாக நான் கருதவில்லை’’ என்றார்.
1


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக